சென்னை: ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் குமரேசன் (33) என்ற இளைஞரை ஒரு கும்பல் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டும் வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை குமரேசன் அவரது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை அதே பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்று சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டவே குமரேசனின் குடும்பத்தினர் இதனைக் கண்டு அங்கு ஓடிச்சென்றனர். அப்போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், ரத்த காயத்தில் மயக்க நிலையில் இருந்த குமரேசனை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில் குமரேசனை சரமாரியாக வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த டிங்கர் குமரன், மனோஜ், மெக்கானிக் சுரேஷ், ராஜா, தீபன், பிரசாந்த் ஆகிய ஏழு பேர் என தெரியவந்தது.
டிங்கர் குமரன் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் சரித்திரபதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும், வெட்டப்பட்ட குமரேசனும், வெட்டிய கும்பலும் தந்தை பெரியார் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரே பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை ஐஸ் அவுஸ் காவல் துறையினர் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிங்கர் குமரன், குமரேசனுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி இருந்ததாகவும், ஆனால் பல ஆண்டுகளாக குமரன் பணத்தை கொடுக்காமல் இருந்துவந்த நிலையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
அந்த பிரச்னையின் விளைவாக டிங்கர் குமரன் நண்பர்களுடன் சேர்ந்து குமரேசனை வெட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் மற்றவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் நடைபெறும்போது ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை என்கவுண்டர்; ஆர்டிஓ முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய திட்டம்!