சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார். இவருக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.18) இரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று (செப்.19) அதிகாலையில் விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, தனது மகளின் உடலை மீட்ட விஜய் ஆண்டனி உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிகாக வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மீராவின் உடலுக்கு அவரது உறவினர்கள், பள்ளி தோழிகள், திரைப்பட பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இன்று (செப்.20) காலை விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் மீராவின் உடலுக்கு தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த திருப்பலி முடிந்ததும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் கல்லரை தோட்டத்தில் போலீசார் பாதுகாப்புடன் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.