சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 1,000 ஆண்டுகள் பழமையான சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்தனர். ஆனால், அங்கு நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருக்கும் அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்பது தெரியவந்தது. மாசிலாமணி என்கிற சிலை செய்யும் ஸ்தபதி அந்த வீட்டின் உரிமையாளர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

மேலும் மாசிலாமணி தற்போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சுவாமிமலை அருகே பதுங்கி இருப்பதையும் கண்டுபிடித்த போலீசார், அங்கு சென்று உரிய ஆவணங்களுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 1,000 ஆண்டுகள் பழமையான ஐந்து உலோக சிலைகளும், 100 ஆண்டுகள் பழமையான 5 உலோக சிலைகள் உட்பட மொத்தம் 8 சிலைகளை மாசிலாமணிக்குச் சொந்தமான இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

குறிப்பாக 1,000 ஆண்டுகள் பழமையான 200 கிலோ எடையுள்ள போக சக்தி தேவி உலோக சிலை, நின்ற நிலையிலான புத்தர் உலோகசிலை, அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் உலோக சிலை, ஆண்டாள் உலோக சிலை, விஷ்ணு உலோக சிலைகள் மற்றும் 100 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்மன் சிலை, ரமண மகரிஷி சிலை, நடராஜர் சிலை ஆகிய சிலைகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால், இந்த சிலைகள் அனைத்தையும் தான் செய்ததாகக்கூறி மாசிலாமணி சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அங்கு இருந்த தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாசிலாமணி வீட்டில் இருந்து இந்த ஐந்து சிலைகளும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்கும் வகையிலான தொல்லியல் துறை வழங்கிய தொன்மைச்சான்றுகளையும் மீட்டுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் என சான்றிதழ் பெற்றுவிட்டு எப்படி, தான் செய்ததாக மாசிலாமணி உரிமை கோருகிறார் என சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து மாசிலாமணியிடம் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அந்த எட்டு சிலைகளும் மீட்கப்பட்டு சென்னை அசோக் நகர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழு நாட்களுக்குள் சிலைகளுக்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும்; இல்லை என்றால் மாசிலாமணியயை கைது செய்யத்திட்டமிட்டு இருப்பதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தாலான உற்சவர் சிலை செய்வதில் மோசடியில் ஈடுபட்ட 9 நபர்களில் ஒருவர் என்பதும் சிலைக் கடத்த தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சோழர் கால பார்வதி சிலை...மீட்கும் பணி தீவிரம்