சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர் முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே நிலையம், டாஸ்மாக் கடை, வீடுகள் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோவதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தன.
இருசக்கர வாகனங்கள் தொடர் களவு
இது குறித்து வாகன ஓட்டிகள் மேற்கண்ட காவல் நிலையங்களில் புகார் செய்தனர். இதனையடுத்து முத்தாபுதுபேட்டை காவல் ஆய்வாளர் ராஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், இன்று காலை தனிப்படை காவல் துறையினர் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை, பாலவேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த இளைஞரை காவல் துறையினர் வழிமடக்கி விசாரித்தனர். அப்போது, அவர் காவலர்களிடம் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல் தெரிவித்தார். மேலும், அவர் வந்த பைக்கிற்கு எவ்வித ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
ஒரே சாவி கொண்டு 11 இருசக்கர வாகனங்கள் திருட்டு
இதனையடுத்து, காவலர்கள் பைக்கை பறிமுதல்செய்து இளைஞரைப் பிடித்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிடிப்பட்டவர் திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 3ஆவது தெருவைச் சார்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, திருவள்ளூர், வெங்கல், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் ரயில்வே ஸ்டேஷன், வீடு, கடைகள் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைப் பிரத்யேக சாவி கொண்டு 11 இருசக்கர வாகனங்களைத் திருடிவந்துள்ளார்.
அவர் திருடிய வாகனங்களை திருநின்றவூரையடுத்த பாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த மெக்கானிக் மணிகண்டன் (29) என்பவர் மூலம் பைக்குகளை விற்பனை செய்ததாகத் தெரிவித்தார். இதனையடுத்து, காவல் துறையினர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 11 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.
மேலும், திருடிய பைக்குகளை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த மணிகண்டனையும் காவல் துறையினர் பிடித்தனர். இதன்பிறகு, காவல் துறையினர் கார்த்திக், மணிகண்டன் இருவரையும் இன்று மாலை கைதுசெய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:'கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்' - அதிமுக பிரமுகர் மிரட்டல் பேச்சு