சென்னை: குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச்சேர்ந்தவர், சுந்தர். இவர் அதே பகுதியில் பூந்தொட்டிகளுக்கு நார் மற்றும் உரம் விற்பனை செய்யும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். தீபாவளிப்பண்டிகை என்பதால் குடோனை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
இந்த குடோனில் இருந்து இன்று (அக். 24) காலை புகை வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்குத்தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி, விருகம்பாக்கம், அம்பத்தூர் ஆகியப்பகுதியிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை சுமார் 1 மணி நேரம் போராடி அவர்கள் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த நார்கள், உரம் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவை எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் வரையிலான பொருட்கள் தீயில் எரிந்து வீணானது தெரியவந்தது. குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் மாங்காடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து செய்தி தொலைக்காட்சி ஊழியர் பலி; முதலமைச்சர் இரங்கல்