சென்னை: இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ராவேந்திரா(63). இவருடைய மனைவி உதய ராணி(54). இலங்கை தமிழர்களான இவர்கள், சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை பார்த்து விட்டு, கோயில்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்றதாக தெரிகிறது.
அதன்பின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து விமானத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் இலங்கை செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் இருவரும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கொழும்பு செல்வதற்காக, டிக்கெட் எடுத்துவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்று, போர்டிங் பாஸ் வாங்கி, பாதுகாப்பு சோதனைகள் பிரிவில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ராவேந்திரா திடீரென நெஞ்சு வலியால் துடித்துள்ளார்.
உடனே சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்தனர். ஆனால் அதற்குள் ராகவேந்திரா மயங்கி விழுந்து விட்டார். சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து ராகவேந்திராவை பரிசோதித்து விட்டு, மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே சென்னை விமான நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து, ராவேந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக காவல்துறையினர் 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் சேட்டிங் மூலம் பணம் சம்பாதிக்குமாறு மனைவியை துன்புறுத்திய கணவர்