சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், தேசிய அளவில் கூட்டணி வியூகங்கள் களைகட்டத் துவங்கியுள்ளது. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாட்னாவில் முதல் கூட்டம், பெங்களூருவில் இரண்டாவது கூட்டம், மும்பையில் விரைவில் மூன்றாவது கூட்டம் என எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வேலைகளை துவங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை18) டெல்லியில் நடைபெற்றது. அதில் அதிமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) உள்ளிட்ட 38 கட்சிகள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியதுவம் அளித்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் லெட்டர் பேட் கட்சிகள் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து அதிமுக, பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் டெல்லிக்கு சென்றிருந்த நிலையில், அதிமுக சார்பில் சென்றிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரவேற்பு அளித்தார்.
மேலும், பிரதமர் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், தென் மாநில பிரதிநிதியாக எடப்பாடி பழனிசாமி கருதப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வு அண்ணாமலையின் ஆதரவாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் முக்கியதும் என்று பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, "மூன்றாவது முறை மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.இதில் பங்கேற்ற 38 கட்சிகளுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தவரையில் அதிமுகதான் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. இதை கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு அண்ணாமலை ஒன்றும் அதிருப்தி அடைய மாட்டார்.
சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமிக்கு இவ்வளவு மரியாதை அளிக்க சொன்னது அண்ணாமலைதான். அதிமுக-பாஜக இடையே உள்ள கசப்பை சரிசெய்வதற்காகவும், தேர்தல் நேரத்தில் ஒரு சுமூக உறவை மேற்கொள்வதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
சுமூக உறவின் மூலம் அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றிபெறும் என்பது அண்ணாமலையின் கணிப்பாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுடன்தான் கூட்டணி என்பதை டெல்லி மேலிடம் கூறியதை அண்ணாமலை ஒரு கட்டத்தில் முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாஜகவை அச்சப்பட வைத்துள்ளது. அதிமுக தலையில்தான் கூட்டணி, பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு போன்ற அதிமுகவின் செயல்பாடுகளால் கூட்டணி முறிந்து விடுமோ என பாஜக மேலிடம் கருதியது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பாஜகவிற்கு மிகவும் அவசியம் ஆகியுள்ளது. இதன் காரணமாகவே டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ்சை பாஜக முழுமையாக கைவிட்டது என்று சொல்ல முடியாது" என கூறினார்.
இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி!