சென்னை: சென்னையில் கடந்த 30ஆம் தேதி புதிதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். குறிப்பாக பொறுப்பேற்ற பிறகு சென்னையில் ரவுடிசம் என்ற ஒன்றிற்கு இடம் கிடையாது எனவும் ரவுடிசம் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவை முற்றிலுமாக ஒடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அவர் பொறுப்பேற்ற கடந்த 14 நாள்களில் சென்னையில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளது. 6 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. குறிப்பாக ஜூன் 30-ஆம் தேதி இரவு கிண்டி வண்டிக்காரன் தெருவில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் என்பவரை பொதுமக்கள் முன்னிலையில் விரட்டிச் சென்று ஒரு கும்பல் சூப்பர் மார்கெட் ஒன்றில் வைத்துக் கொலை செய்தது. கொலை கும்பலிடம் விசாரித்ததில், "எங்களை கொலை செய்வதாக கூறினான், அதனால் நாங்கள் அவனை கொலை செய்தோம்" என கூலாக காவல் துறையினரிடம் தெரிவித்த வீடியோ வைரலானது.
இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே சம்பவத்தை நடத்தியவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அன்றிரவு கோயம்பேடு காவல் நிலையம் அருகே ஆம்னி பேருந்து நடத்துநர் ரவிசந்திரன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். பாலியல் தொழிலுக்கு தொல்லை கொடுத்ததால் அடித்து கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த கொலை வழக்கில் திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 3 ஆம் தேதி, வேளச்சேரியில் திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தை ஏரியில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 1 ஆம் தேதி திருவொற்றியூரில் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாடியில் இருந்து பெண் ஒருவர் கீழே தள்ளி விடபட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த பெண் ஜூலை 10 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி இந்த வழக்கில் ஒருவர் கைது செய்தனர்.
ஜூலை 10 ஆம் தேதி இரவு, மயிலாப்பூரில் டோக்கன் ராஜா என்ற ரவுடி பொதுமக்கள் முன்னிலையிலே ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். தந்தை கொலைக்கு பழி தீர்க்க 20 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழி நடந்த இச்சம்பவத்தில் இதுவரை 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜூலை 11 ஆம் தேதி, வில்லிவாக்கத்தில் மதியம் 12.15 மணியளவில் பட்டப் பகலில் காவல் நிலையம் அருகே கல்லறை அப்பு என்ற ரவுடி வெட்டியும், தலையில் கல்லை போட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்வதற்கு முன் இரண்டு நாள்களாக அப்பு கத்தியை வைத்து பலரை மிரட்டி வந்துள்ளான்.
அப்பொது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அன்று இரவே (ஜூலை 11 ஆம் தேதி), பழைய வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் தந்தை வீரமுத்துவை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஜூலை 13 ஆம் தேதி திருமங்கலத்தில் மாந்தீரிக செயல்களில் ஈடுப்பட்டுவந்த சையது சிக்கந்தர் என்பவர் இரண்டு இளைஞர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை மற்றும் தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் இந்த கொலை நடைப்பெற்றுள்ளதும், ஏற்கனவே விக்கி என்பவரின் தந்தையை அடித்த வழக்கில் சிக்கந்தர் காவல் நிலைய ஜாமீனிலும், அவரது நண்பர் சிறைக்கும் சென்றுள்ளார். இந்த வழக்கில் இருவர் நீதிமன்றத்திலும், ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜூலை 13 ஆம் தேதி கிண்டியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை பாலசுப்பிரமணியனை, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த ஜெபரீஷ் என்ற 23 வயது மகன் கைது செய்யப்பட்டார். பதற வைக்கும் கொலை சம்பவங்கள் மட்டுமல்லாமல் கடந்த 8 ஆம் தேதி பட்டப்பகலில் காளை என்ற ரவுடியை சிறுவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
தங்களை அடித்து துன்புறுத்தியதால் 17 வயது சிறுவர்கள் கையில் கத்தி ஏந்தி ரவுடியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆபத்தான நிலையில் ரவுடி சிகிச்சைப் பெற்று வருகிறார். ஜூலை 9ஆம் தேதி சென்னை எம்கேபி நகரில் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அலெக்ஸ் என்ற 18 வயது சிறுவன் கொடூரமாக வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
அதே நாளில் புளியந்தோப்பில் அக்கா மகளை காதலிப்பதாக தொந்தரவு செய்வர்களை கண்டித்த வழக்கறிஞர் தமிழ்செல்வன் என்பவரை 16 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் கொடூரமாக கத்தியால் தாக்கியுள்ளனர். அதே போல சென்னை நந்தம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியை பொதுமக்கள் முன்னிலையில் பட்டபகலில் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய நவீன் என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர். கல்லூரி மாணவி இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஜூலை 8 ஆம் தேதி இரவு புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (26). பிரபல ரவுடியான இவர், நேற்று இரவு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு சென்றபோது, அவரை வழிமறித்து கத்தியால் தமிழரசனை ஓட, ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ரவுடி தமிழரசன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அதேநாளில், கோயம்பேடு மார்க்கெட்டில் மது வாங்கி தர மறுத்த கல்லூரி மாணவரை வெட்டிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல சென்னையில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த ஜூலை 9ஆம் தேதி இரவு, ராயபுரத்தில் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேநாளில், சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் 5 ஆவது தெருவில் வசிக்கும் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா (21) என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். அந்த பெண் தன்னை திடீரென காதலிக்க மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த நான், அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கைதான சூர்யா காவல் துறையினரின் வாக்குமூலம் அளித்தார்.
ஜூலை 11 ஆம் தேதி பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பாமக வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷாலை கொலை செய்வதற்கு, சத்யநாராயணனின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாத கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர். இச்சம்பவத்தில், 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுமட்டுமின்றி ரயில்வே காவல் துறைக்கு எல்லைக்குட்பட்ட இடங்களில் ஜூலை 2 ஆம் தேதி கந்தன் சாவடியைச் சேர்ந்த இளம்பெண் பிரீத்தி ரயிலில் பயணம் செய்யும்போது செல்போன் வழிப்பறி கும்பலால் தள்ளிவிடப்பட்டு பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
அவர் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். இதில் இருவரை ரயில்வே காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்தனர். பல கணவுகளோடு இருந்த இளம்பெண்ணை வழிப்பறி கொள்ளையர்கள் கஞ்சா அடிக்க பணம் இல்லாததால் செல்போனை பறிக்க அப்பொழுது இளம்பெண் உயிர் இழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னை புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சென்னையிலும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் உருவாகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை சம்பவங்களில் 2 கொலை சம்பவங்களில் மதுபோதை தகராறிலும், ஒரு கொலை வாடகை தகராறில் நடைப்பெற்றுள்ளது. மேலும், ஒரு கொலை செல்போன் பறிப்பதிலும், ஒரு கொலை தனிப்பட்ட காரணத்திற்காக நடைப்பெற்றுள்ளது. மற்ற 5 கொலைகள் முன்விரோதம் காரணமாக நடைப்பெற்றுள்ளது. போதையாலும், வழிப்பறியாலும், பழிக்குப்பழி காரணமாக கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளது. இந்த நிலையில் புதிய காவல் ஆணையர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: Chennai Crime News: சென்னை மாநகரில் இன்று நடந்த குற்றச் சம்பவங்கள்!