சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையின் மேம்பாட்டிற்கு பல்வேறு புதியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து தகைச்சால் பள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இளங்கலை படிப்புகளுக்கு மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கும், உயர்கல்வியினை முடித்த பின்னர் வேலை வாய்ப்பினை பெறவும் நான் முதல்வன் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
கரோனா தொற்று குறைந்த பின்னர் 2021ம் ஆண்டில் மாணவர்களுக்குப் பகுதியாகவும், சுழற்சி முறையிலும் பள்ளிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து 2022 பிப்ரவரி 1 ந் தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் வழக்கம் பாேல் 100 சதவீதம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதேபாேல் நான் முதல்வன் என்ற திட்டத்தை மார்ச் 1 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறவும், மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நான் முதல்வன் இணைய முகப்பில் ௨௦௦௦ த்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் மூலம் பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடைபெறாமல், மே மாதம் நடத்தப்பட்டது.இதற்கான தேர்வு கால அட்டவணை மார்ச் மாதம் 2 ந் தேதி வெளியிடப்பட்டது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளியின் மீது ஆர்வத்தை உருவாக்கும் வகையில் நம் பள்ளி நம் பெருமை என்ற பரப்புரைத் திட்டத்தை மார்ச் 8 ந் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களும் பங்கேற்கும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மார்ச் 21 ந் தேதி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழுவின் கூட்டத்தில் 23 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 1 ந் தேதி புதுதில்லியில், மேற்கு வினோத் நகரில் உள்ள தில்லி அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்டார். தில்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 13 இலட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் எனவும், அதேபோன்று தமிழ்நாட்டிலும் பள்ளிகள் துவக்கப்படும் எனவும் அறிவித்தார்.
மாநிலக் கலவிக் கொள்கைக்கான குழுவின் உறுப்பினர்களை ஏப்ரல் 5 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு ஆண்டிற்குள் குழு கொள்கையை தயார் செய்து அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜூன் 1 ந் தேதி முதல் 12 ந் தேதி வரையில் நடைபெற்ற ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்பில் உலகளாவிய சாதனையைப் படைத்தனர். கரோனா தொற்றினால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளைக் களையும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 13 ந் தேதி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு கற்பிக்கும் பணியும், வாசிப்பு திறனும் கற்றுத்தரப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்வது அதிகரித்து வந்தது. அதற்கு காரோனா தொற்றால் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுதான் காரணம் எனவும், மாணவர்கள் மன அழுத்ததுடன் பள்ளிக்கு வருகின்றனர் என கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 27 ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு அளிக்கும் திடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு மன நல ஆலேசானையும் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் செப்டம்பர் 5 ந் தேதி நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப் பெண் திட்டத்தைத் துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் இளங்கலை பாடப்பிரிவினை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் அனைத்து வசதிகளுடன் 15 மாதிரிப் பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் குடும்ப சூழ்நிலையின் காரணமாகப் பள்ளிக்கு கிளம்பி வரும் போது, காலையில் உணவு உண்ணாமல் வருகின்றனர். எனவே அவர்களுக்குக் காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அந்தத் திட்டத்தை செப்டம்பர் 15 ந் தேதி மதுரையில் துவக்கி வைத்தார்,
மாணவர்களிடம் போதைப் பழக்கம் அதிகரிக்கத் துவங்கியதுடன், மாணவர்களைக் கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் கலச்சாரமும் அதிகரிக்கத் துவங்கியது. இது போன்ற குற்றச்செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும், அவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறையை இணைத்து சிற்பி என்ற திட்டத்தை செப்டம்பர் 15 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2300 பேர் அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழகத்தை உருவாக்கும் வகையில் கனவு ஆசிரியர், தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய 3 இதழ்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணக்கு பாடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் 6 முதல் 8 ம் வகுப்பு வரையில் வானவில் மன்றம் நவம்பர் 28 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பேராசிரியர் அன்பழகன் பெயரில் 7500 கோடி 5 ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் 1400 கோடி நடப்பாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வளாகத்திற்குப் பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தகைச்சால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும், தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். கரோனா தொற்றினால் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு 2020 ம் ஆண்டு ஏப்ரல் முதல் செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.
ஆனால் பெரும்பாலான கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு இணைய வசதி இல்லாத காரணத்தினால் அடிப்படை கல்வி அறிவினை பெறுவதில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் முதலில் 2021 அக்டோபர் 27 ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் நடைபெற்றது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் கல்வித்துறையில் பொறியியல் மாணவர்களும் தமிழர்களின் கலச்சாரம், பண்பாடு, தொழில்நுட்ப திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் கட்டாயம் 6 மாதம் தொழிற்சாலைகளில் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் பாடத்திட்டம் தொழிற்சாலைக்கு பணியாளர்களை அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் தொழிற்சாலைகளில் நேரடியாக பயிற்சி பெறும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உயர்கல்வித்துறையின் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் மேற்கொண்டு வருகிறது. போட்டித் தேர்வினை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட ஆசிரியர்களின் நலன் குறித்து எந்த விதமான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் பணி வரன்முறை, இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் பணியாளர்களை நியமனம் செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது படித்துவிட்டு வேலையை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களை வெறுப்புடைய செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு மீண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, தேர்வினை நடத்துவதற்கு ஆசிரியர் தோ்வு வாரியம் பணிகளை மேற்காெண்டு வருகிறது. ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உயர் கல்வித்துறை அதனை ஏற்காமல் பணிக் காலத்திற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கியும், அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரையிலும் கவுரவ விரிவுரையாளர்களுக்குச் சலுகை வழங்கி உள்ளது.
இதையும் படிங்க:TN Police 2022 roundup: தமிழ்நாடு காவல்துறைக்கு எப்படி அமைந்தது?