புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள பெண்கள், சிறையில் உள்ளவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், போதிய பாதுகாப்பு ஆகியவை கிடைப்பதில்லை என புதுச்சேரி உத்திரவாகிப் பேட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் பீமாராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், "பெண்கள் சிறையில் பெரும்பாலானோர் 30 வயது முதல் 50 வயதுக்குள்பட்டவர்களாக இருப்பதாகவும் அவர்கள் உறங்குவதற்குத் தேவையான படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் உறங்க வைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியலமைப்பு சட்டப்படி புதுச்சேரி பெரிய காலாட்பேட்டையில் 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படும் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என மூன்று பகுதிகளாக அமைக்கப்படவில்லை. மாறாக தண்டனை கைதிகளுக்கு ஒரு பகுதியும் விசாரணை, பெண் கைதிகளுக்கு மற்றொரு பிரிவும் என இரண்டு பிரிவு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில் பொருள்கள் வைக்கும் ஷோரூம்களில் பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. பெண்களுக்கு தனி மருத்துவமனை இல்லை, அடிப்படை தேவைகளுக்காகக்கூட ஆண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தாண்டி பொதுப்பாதை வழியாகச் செல்லும் நிலை உள்ளது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.
எனவே புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்களை உடனடியாக தனியாகப் பிரிப்பதற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி சிறையில் அவர்களை அடைப்பதற்கும் புதுச்சேரி அரசு, தலைமைச் செயலர், சிறைத்துறை ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கைவைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல்செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் புதுச்சேரி மத்திய சிறைச்சாலையின் தலைமை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், பெண்களுக்கு என அடிப்படை வசதிகளுடனும், அவர்களுக்கு தனி வழியுடனும் கூடிய சிறைச்சாலை கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை!