சென்னை: குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (46). இவர் குன்றத்தூர் அரசு பணிமனையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இன்று (நவ.14) அதிகாலை குன்றத்தூரில் இருந்து பிராட்வே செல்லும் 88k பேருந்தை டீசல் நிரப்பி விட்டு எடுப்பதற்காக வந்தார்.
அப்போது டீசல் நிரப்பி விட்டு பேருந்தை பின்பக்கமாக இயக்கிய போது அங்கு காவலாளியாக வேலை செய்து வந்த குன்றத்துரைச் சேர்ந்த வேலுச்சாமி (65), என்பவர் பேருந்தின் பின்பகுதியில் இருப்பது தெரியாமல் பின்னோக்கி இயக்கியதில் வேலுச்சாமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் காவல் துறையினர், உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குன்றத்தூர் பணிமனையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்ட மனைவி பலி; சோகத்தில் கணவர் தற்கொலை..