சென்னை: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் விளையாட்டுத் தொடர் கோலகலமாக நடைபெற்றது. நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய போட்டி டிசம்பர் 4ஆம் தேதி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது.
பவர் லிஃப்டிங் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் 13 வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை அமுத சுகந்தி, பல்வேறு எடைப்பிரிவுகளில் கலந்து கொண்டு 5 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றினார்.
பதக்கம் வென்ற கையோடு சென்னை திரும்பிய வீராங்கனை அமுத சுகந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமுத சுகந்தி, "தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 15 பேர் கலந்துகொண்டதில் அனைவரும் பதக்கம் வென்று உள்ளோம். நான் ஐந்து தங்கம் உள்பட 6 பதக்கங்கள் வென்றுள்ளேன்.
தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம். பெண்கள் இந்தத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தத் துறையில் பெண்கள் குறைவாகவே உள்ளனர். என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை அமுத சுகந்திக்கு பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வரவேற்பு அளித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் விடியலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் - ஓ.பி.எஸ். கண்டனம்