சென்னை - UFO (Unidentified Flying Object) எனப்படும் அடையாளம் காணப்பட முடியாத பறக்கும் பொருள் என்பது வெளி கிரகவாசிகள் (Aliens) பயன்படுத்தும் பறக்கும் தட்டுகளாக கூறப்படுகிறது. முதன்முதலில் ஒரு பறக்கும் தட்டை பார்த்ததாகச் சொன்னவர் அமெரிக்காவைச் சேர்ந்த விமானி கென்னெத் அர்னால்ட். இவர் 1947ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தின் மீது ஒன்பது பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகக் கூறினார்.
பறக்கும் தட்டுகளை UFO என முதன்முதலில் அழைத்தது அமெரிக்க விமானப்படை தான். 1952ஆம் ஆண்டு, நிபுணர்கள் ஆராய்ந்த பின்னரும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களைக் குறிக்க இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. இந்த பறக்கும் தட்டுகளில் ஏலியன்களும் பயணிக்கின்றன என தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராயத் தொடங்கினர். பல்வேறு காலகட்டங்களில் உலகம் முழுவதும் பலரும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக பதிவுகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த ஆண்டு மட்டும் நாசா அமைத்த குழு ஆய்வு மேற்கொண்டதில் எல்லோருக்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகள் குறித்து பதிவுகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. கடந்த 2020ஆம் ஆண்டு வரை பறக்கும் தட்டுகள் இருப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதன் பின் அமெரிக்க தரப்பிலிருந்து பறக்கும் தட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ வீடியோக்களை வெளியிட்டு விளக்கங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். சுமார் 144 UFOக்கள் பற்றி அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பாக முன்னாள் அமெரிக்க விமானப்படை உளவுத்துறை அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் டேவிட் க்ரூஷ், நாடாளுமன்ற விசாரணை ஒன்றில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைக் குறிப்பிட்டார். அமெரிக்கா தொடர்ந்து பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியாவிலும் 1951ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை 10க்கும் மேற்பட்ட முறை பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக பல்வேறு பதிவுகள் உள்ளன.
கடைசியாக பஞ்சாப் லூதியானா பகுதியிலும் குஜராத்திலும் அடையாளம் காணப்பட முடியாத பறக்கும் பொருள்கள் பறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிபிசிஐடியில் தமிழ்நாடு டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிரதீப் வி பிலிப், முட்டுக்காடு பகுதியில் கடற்கரை ஓரம் தனது மனைவியுடன் செல்லும் பொழுது வானத்தில் நான்கு ஒளிரும் தன்மை கொண்ட பறக்கும் பொருள்களை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர் தன் கையில் உள்ள செல்போனில் ஜூம் செய்து பார்க்கும் பொழுது ஒளிரும் தன்மை போனதாகவும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட முடியாத முறையில் நான்கு பறக்கும் பொருள்கள் ஒரே திசையை நோக்கி பறந்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 20 முதல் 25 விநாடிகள் மட்டுமே வானத்தில் பார்த்ததாகவும் அதன் பின் மறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
UFOக்கள் குறித்து தொடர்ந்து தகவல்களை சேகரித்து வரும் சபீர் உசேன் என்பவர் மூலமாக அமெரிக்காவில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களிடம் இது குறித்து பல்வேறு விளக்கங்களை பெற்ற பிறகு, இந்த புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக ஓய்வு பெற்ற டிஜிபி பிரதீப் ஃபிலிப் தெரிவித்துள்ளார். இதேபோன்று பிரிட்டனில், பறக்கும் தட்டுகள் வானில், தென்பட்டு நான்கு துண்டுகளாக பிரிந்து பின்பு, ஒன்று சேர்ந்து வானில் மறைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற தமிழ்நாடு டிஜிபி பிரதீப் வி பிலிப், வெளியிட்ட புகைப்பட ஆதாரங்களை வைத்து உண்மையில் பறக்கும் தட்டுகள் தமிழ்நாட்டின் வான்வெளியில் பறந்துள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஓய்வுபெற்ற டிஜிபி பிரதீப் வி பிலிப்பிடம் பேசியபோது, “முட்டுக்காடு பகுதியில் நானும் எனது மனைவியும் பறக்கும் தட்டை பார்த்தோம். இது குறித்து இணையதளங்களில் படித்ததால் அது குறித்த புரிதல் இருந்தது.
ஊடகவியலாளர் ஒருவரின் உதவியோடு பறக்கும் தட்டு குறித்து தொடர்ந்து கண்காணித்து வரும் நபரிடம் இதுகுறித்து விசாரித்து பறக்கும் தட்டு தான் என்பதை உறுதிப்படுத்திய பிறகு ஊடகங்களுக்கு இந்த புகைப்படத்தை வழங்கினேன். இந்தியாவில் இதுவரை 440 பேர் பறக்கும் தட்டை பார்த்ததாக கூறியிருந்தாலும், இந்தியாவில் பறக்கும் தட்டு புகைப்படத்தை எடுத்திருப்பது இதுவே முதல்முறை. பறக்கும் தட்டை இதுவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளதாக இணையத்தில் தெரிவித்துள்ளனர்.
பறக்கும் தட்டு வந்து சென்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் அந்த பகுதியில் அலைக்கதிர் அதிகமாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதனை வைத்து அந்தப் பகுதியில் பறக்கும் தட்டு வந்து சென்றதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். பறக்கும் தட்டு குறித்து அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் இது குறித்து குழு அமைக்க வேண்டும். அமெரிக்கா, ஜப்பான், சிலி போன்ற நாடுகளில் பறக்கும் தட்டு குறித்து அதிகம் ஆய்வு மேற்கொள்கிறது.
தமிழ்நாடு அரசும் பறக்கும் தட்டு குறித்து ஆய்வு மேற்கொண்டால் அதி நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். எனக்கு கிடைத்துள்ள தகவல்களை வைத்து தொடர்ந்து பறக்கும் தட்டு குறித்து பின் தொடர்வேன்” என அவர் கூறினார்.
இதையும் படிங்க: Twitter logo: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்சில் ட்விட்டர் லோகோ மாற்றம்! நீல பறவைக்கு விடுதலை!