முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராஜா, கடந்த 1999 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராஜா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ் குமார், அவரது நெருங்கிய கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் சில தனியார் நிறுவனங்களையும் இணைத்து மொத்தமாக 17 பேர் மீது இந்தக் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில், 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனைகளையும் நடத்தியது. குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடைபெற்ற இந்த சோதனைகள், டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. குறிப்பாக, சென்னையில் மட்டும் 6 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ-யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆ.ராசா மீது போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு ஏழு ஆண்டுகளுக்குப்பின் விசாரணை முடிந்து முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்ட ஆறு பேர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 விழுக்காடு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுமார் ரூ.5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த குற்ற பத்திரிக்கைக்கு எதிராக ஆ.ராசா தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு ஆ.ராசா உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றை குற்ற வழக்கின் விசாரணையில் டெல்லி நீதிமன்றம் ஆ.ராசாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.