'பார்கின்சன்' என்னும் நரம்பியல் நோய் அவ்வளவாக மக்கள் மத்தியில் பரவியிராத ஒரு நோய் என்றே சொல்லலாம். இந்த நோய் தாக்குதல் பொதுவாக 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருவதால் மூன்றாக பிரிக்கப்படுகிறது. இது பார்கின்சன் நோய் தான் எனத் தெரியாமலேயே பலரும் அதற்கு மருத்துவங்களை பார்த்து வரும் நிலை நீடிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 1 சதவிகிதத்தினர் பார்கின்சன் என்னும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல ஆய்வுகளின்படி 1 லட்சம் பேரில் 76,148 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ, அவர்களுக்கான பராமரிப்பு பற்றியோ, நிதியுதவி பற்றியோ எந்தத் தகவலும் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்கின்றனர் மருத்துவர்கள்..
தனியார் காப்பீடு இந்நோய்க்கு கிடைக்காது என்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய் பாதிப்பிலிருந்து ஆதரவளிக்க ஒரு வலுவான நிறுவனம் இல்லாமல் துன்பப்படும் நிலை தான் நீடிக்கிறது.
ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வெற்றியும் பெற்றுள்ளார் ஆங்கில முறை கண் மருத்துவரான டாக்டர். சாந்தி பிரியா. சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவர் என்றாலும் இந்த நோய் தாக்குதல் தனக்கு உள்ளது என்பதை வெளியில் சொன்னால் அவர் மற்றவர்களால் ஒதுக்கப்படலாம் என்பது பற்றி குழப்பம் அடையாமல் அதனை ஏற்றுக்கொண்டதோடு, அதனுடன் போராடி அதனை வென்றும் காட்டி 'பார்கின்சன்' நோயினை எதிர்த்த ஓர் இளம் போராளியாக வெளிப்படுகிறார். காரணம் இந்த நோயிற்கு இன்று வரை உலக அளவில் எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே. இருப்பினும் அதற்கான மருத்துகள் கண்டிபிடிக்கும் முயற்சிகள் உலக அளவில் இன்றும் தொடர்கிறது.
டாக்டர். சாந்தி பிரியா, தான் எவ்வாறு இந்த நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டார், இதனால் பொது இடங்களில் என்ன பாதிப்புகளையெல்லாம் எதிர்கொள்ள நேர்ந்தது, பின்னர் தன் உறுதியான தன்னம்பிக்கையின் மூலம் எவ்வாறு அதிலிருந்து மீண்டார் என ஒரு ஒரு குறும்படத்தையே எடுத்து அதில் தானே நடித்து அதனை பிறர் பயன்படுத்திக்கொள்ள வெளியிட்டுள்ளார்.
இந்த நோய் பற்றி டாக்டர். சாந்தி பிரியா கூறுகையில், எந்த நோயையும் நாம் முதல் ஏற்றுக்கொள்ளவேண்டும், பின்னர் அதிலிருந்து விடுபட தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.. அப்போது தான் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து மீள முடியும் என்கிறார் ஆணித்தரமாக...
டாக்டர். சாந்தி பிரியா தனது குறும்படத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இ.அ.ப மூலம் வெளியிட்டார். அப்போது, பேசிய பீலா ராஜேஷ், ஒரு நோயை ஏற்றுக்கொண்டு அதனை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதுடன் அதனை குறும்படமாகவும் எடுத்துள்ள சாதனை பெண் சாந்தி பிரியா. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க தனியாக ஓர் மருத்துவக் குழுவை நிறுவி ஆய்வு செய்து அதற்கான மறுவாழ்வு (ரிகாபிலிட்டேசன்) வழங்க தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய உள்ளது. மேலும் இதற்காக 64 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்க முடிவு செய்துள்ளது என்றார்..
பின்னர் பேசிய டாக்டர். லக்ஷ்மி நரசிம்மன், நான் நடத்தும் மருத்துவமனையில் இயக்கக் கோளாறு சிகிச்சையகத்தில் பார்கின்சன் நோய் பாதிப்புடைய 4 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பல்வேறு அறிகுறிகள் தெரியவரும் அவ்வாறு தெரியவரும்போது மருத்துவரை அணுகுவது சிறந்ததாகும், மேலும் இந்த நோய் குணப்படுத்த முடியாதது என்றாலும் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்பதால் பார்கின்சன் நோய் தாக்குதல் உள்ளவர்கள் மனம் உடையத் தேவையில்லை என்கிறார்..
'பார்கின்சன் டிசீஸ்' எனப்படும் இந்த நோய் வருவதற்கு மிக துல்லியமான காரணம் என இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் சிலருக்கு அது பரம்பரையாக வரலாம், மரபணு மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களாலும் இந்நோய் வரலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்..
நோய் தாக்கியவுடன் நம் வாழ்வு முடிந்து விட்டது என தன்னம்பிக்கை இழந்துவிடும் பலரில் அதனை எதிர்த்து வெற்றி கண்டு அதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தார் பவுண்டேசன் என்கிற அமைப்பையும் உருவாக்கியுள்ள இளம் போராளி டாக்டர். சாந்தி பிரியாவின் ஒரே விருப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்நோய் தடுப்பிற்கான மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு இந்நோய் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.. நடக்கும் என நம்புவோம் என்றார்.