சென்னை: பனையூரில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் அசாதாரணமான சூழ்நிலையினால் பங்கேற்க முடியாதவர்கள், டிக்கெட் நகலை தங்கள் குறைகளுடன் மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டு உள்ளார்.
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின், ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில், நேரலை நிகழ்வு(Live In Concert) நேற்று (செப்.10) மாலை 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம், என்று பல பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் விலை ரூ.3000 முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பல ஆயிரக் கணக்கில் டிக்கெட் வாங்கி வந்த ரசிகர்கள் நிகழ்வை பார்க்க முடியாமல் அவதியடைந்தனர். 20,000 இருக்கைகள் தயார் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்ததுள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நிற்க முடியாமல் தவித்தனர்.
சில்வர், கோல்டு, பிளாட்டினம், டயமண்ட் என 4 பிரிவுகளின் கீழ் டிக்கெட் கொடுக்கப்பட்டு 4 நிறங்களில் டேக் கட்டப்பட்டது. ஆனால், அவர்களால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. இதனால் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர் கடுமையாக அவதிப்பட்டனர். மேலும், ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, டிக்கெட்டை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு உள்ளே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் பலர் திரும்பி சென்றனர். நிகழச்சியில், எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், இருக்கைகளும் இல்லாத மோசமான நிலை இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு, நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.மேலும், இசையை ரசிக்க வந்த ரசிகர்கள், மிக மோசமான அனுபவத்தை பெற்றதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.ஆர் குமான் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட சிரமம் அனைத்துக்கும் முழு பொறுப்பு ஏற்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது X தளத்தில், நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் அசாதாரண சூழ்நிலையால், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் உங்கள் குறைகளுடன் டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்கிற மின்னஞ்சலுக்கு பகிரவும். அது குறித்து எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதில் அளிப்பார்கள் எனவும் பதிவிட்டு உள்ளார்.
மேலும் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் வாகனம் சிக்கியது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாக தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Immanuel Sekaran : தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!