சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி பதவியேற்றுகொண்டதாகவும், பதவியேற்ற நாளிலிருந்து ஆளுநர் ஒரு பிரச்சனைக்குரிய நபராகவே உள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருவதாகவும், எந்த ஒரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆர்.என். ரவி, புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1988 ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது. பொதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 உட்பிரிவு 2 ன் கீழ் ஆளுநர் எந்த ஒரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதையும் மீறி அவர் தலைவராக உள்ளதாகவும், இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அவர் ஆளுநராக பதவி வைக்க தகுதியற்றவர், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல்" ஆளுநரிடம் அண்ணாமலை புகார்!