சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்(26) ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆழ்வார்பேட்டை பகுதியில் விபத்திற்குள்ளானார்.
இதில் இளைஞருக்கு வலது பக்க கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தின்போது அடையாறு போக்குவரத்து புலனாய்வு துறை காவலர்கள் 4 பேர் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்திற்குள்ளான இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தற்போது காயம்பட்ட இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காவலர்களுக்கும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பின்னர், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் முழுவதையும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
மேலும், ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற காவல் நிலையத்திற்கு வரும் மக்களிடம் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நோட்டீஸ்!