சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் மூதாட்டிகளை குறி வைத்து மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை கொள்ளையடிப்பதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து உள்ளது. குறிப்பாக அந்த நபர் முதியவர்களிடம் தான் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
மேலும், அரசின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் தமிழக அரசின் முதியவர்களுக்கு ஒரு சவரன் நகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஸ்லீப் ஒன்றையும் முதியவர்களிடம் கொடுக்கிறார். பின்னர் நகை அணிந்திருந்தால் முதியோர் உதவி தொகை தர மாட்டார்கள் என முதியவர்களிடம் கூறி பர்ஸில் நகைகளை வைக்குமாறு கூறி, ஸ்லீப்பை நான் கூறும் அலுவலகத்தில் கொடுத்தால் பணம் மற்றும் தங்கம் கொடுத்துவிடுவார்கள் என முதியவர்களிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி மூதாட்டிகள், அலுவலகத்திற்கு சென்ற பின் அந்த நபர் நகைகளை சுருட்டிக்கொண்டு தப்பிச்செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை போலீசார் கண்டுபிடித்தனர். குறிப்பாக கடந்த 1 மாதத்தில் மூன்று மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி 10 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக புகார்கள் வந்து உள்ளது.
இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பழைய குற்றவாளி மாற்றுத்திறனாளியான சித்ரவேல் (வயது 45) என்பது தெரியவந்தது.
இதை அடுத்து சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து தனிப்படை போலீசார் மதுரை எழில் நகரில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த சித்ரவேலுவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சித்ரவேலிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது. சிறுவயதிலேயே குற்றச்செயலில் ஈடுபட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு சென்ற சித்ரவேல், பின்னர் வெளியே வந்து கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வந்து உள்ளார்.
பின்னர் சித்ரவேலுக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால் மாற்று திறனாளியான சித்ரவேல் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக மாற்று திறனாளியான சித்ரவேலுவால் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட முடியாது என்பதால் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் செயலில் சித்ரவேல் இறங்கி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மூதாட்டிகளை குறிவைத்து முதியோர் உதவித் தொகை மற்றும் தங்கம் தருவதாக கூறி அழைத்து சென்று தங்க நகைகளை கொள்ளையடிப்பதை சித்ரவேல் வாடிக்கையாக வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போல கடந்த மூன்று ஆண்டுகளாக சித்ரவேல் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை இரு மகளின் திருமணத்திற்காகவும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும் சித்ரவேல் பயன்படுத்தி இருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்து உள்ளார். மேலும் ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மீது நாகர்கோவில், மதுரை, சென்னை, தர்மபுரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சித்திரவேலுவிடம் இருந்து 27 கிராம் தங்க நகைகளை கைப்பற்றி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூன்று நாள்களாக மது இல்லை; விரக்தியில் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு!