இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் பயணித்த வேலூரைச் சோ்ந்த யாமின்ஷபி (32) என்ற பயணி புகைப் பிடித்துத்துள்ளார். விமானத்திற்குள் புகைப்பிடிக்கக் கூடாது என்ற தடையை எடுத்துக் கூறி, சக பயணிகள் அவரைத் தடுத்துள்ளனர்.
ஆனால் யாமின்ஷபி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகைப்பிடித்துள்ளார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் வந்து அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் அவா்களிடமும் யாமின்ஷபி வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து விமான பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாகத் தலைமை விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நேற்றிரவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. உடனடியாகப் பாதுகாப்பு அலுவலர்கள் விமானத்திற்குள் புகைப்பிடித்த பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கி விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன்பின்பு இண்டிகோ ஏா்லைன்ஸ் அலுவலரின் புகாரின்பேரில், அப்பயணியை சென்னை விமான நிலைய காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பயணி யாமின்ஷபி வேலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் எனவும், டெல்லியில் நடந்த உறவினர் திருமண விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றுவிட்டு விமானத்தில் திரும்பியுள்ளார் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!