சென்னை: தாம்பரம் அடுத்து சேலையூர் மப்பேடு பகுதியில் சாத்தைய்யா(45) என்பவர் ஆவின் பாலகம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அதிகாலையில் கடையின் வெளியே இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இதனால் பால் பாக்கெட்டுகளை இறக்கி வைக்க வரும் நபர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஆர்டர் கொடுத்த பால் பாக்கெட்டுகளை சரியான எண்ணிக்கையில் இறக்கி வைக்கிறோம் பால் குறைவிற்கு அவர்கள் காரணம் இல்லை என்றும் வைக்கும் போது சரியான எண்ணிக்கையிலே வைக்கிறோம் குறைவிற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
அதன் பிறகு சந்தேகம் அடைந்த சாத்தைய்யா, அவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதனைப் பார்த்த போது கடந்த ஒரு மாதமாகப் பலமுறை மூன்று மர்ம நபர்கள் கடையின் அருகே வந்து பதுங்கி இருந்து ஒரு நபர் மட்டும் கடையின் வாசலில் இறக்கி வைத்திருந்த பால் பாக்கெட்டுகளை தனது சட்டைக்குள் அள்ளிச் செல்லும் சி.சி.டிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாத்தைய்யா, இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் உள்ள குற்ற பிரிவு ஆய்வாளர் சுப்பிரமணியிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாத்தைய்யாவை அனுப்பி வைத்துள்ளார் ஆய்வாளர் சுப்பிரமணி. ஆனால் அதன் பிறகு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தொடர்ந்து பால் பாக்கெட்டுகளின் திருட்டு நடந்து வந்துள்ளது. இதனால் போலீசாரை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என எண்ணம் கொண்டு, திருடர்களைத் தானே பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதிகாலை பால் பாக்கெட்டுகள் இறக்கி வைப்பதற்கு முன்பு கடையின் அருகே வந்து பதுங்கி இருந்துள்ளார். அப்போது பால் திருட வந்த திருடனை மடக்கிப் பிடித்துள்ளார்.
காவல் கட்டுப்பாட்டு எண் 100க்கு அழைத்து இது குறித்துத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த செலையூர் காவல்துறையினர் வசமாக சிக்கிய பால் பாக்கெட் திருடனை அழைத்துச் சென்று விசாரித்ததில், இதுவரையில் 300க்கும் மேற்பட்ட பால் பாக்கெட் திருடியதாகத் தெரியவந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் இதற்கெல்லாம் வழக்கு பதிய முடியாது என்றும் வேண்டுமென்றால் அவரிடம் இருந்து திருடுபோன பால் பாக்கெட்களுக்கு திருடிய நபரிடமிருந்து எங்களால் முடிந்ததால் பணத்தை வாங்கி தருவதாக கூறி திருடிய அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையின் இந்த செயலால் விரக்தி அடைந்த சாத்தைய்யா, அவர் பால் பாக்கெட்டுகளை திருடும் சி.சி.டிவி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தை: பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!