சென்னை: தாம்பரம் செல்வதற்காக பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் நடைமேடை 1க்கு இன்று(ஏப்ரல் 24) மாலை 4.30 மணியளவில் இயக்கப்பட்டுள்ளது. அப்போது நடைமேடைக்கு அருகில் வந்தகொண்டிருந்தபோது ரயில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடைமேடையில் ஏறி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். பணிமனையில் இருந்து ரயிலை இயக்கி வந்ததால் பயணிகள் யாரும் ரயிலில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் காயமடைந்த ரயில் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் பிரேக் பிடிக்கத் தவறியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் இளங்கோ, 'ரயில் ஓட்டுநர் கவனக்குறைவாக ரயிலை இயக்கியுள்ளார். இதனால் ரயில் தடம்புரண்டு அருகில் உள்ள கட்டடம் மீது மோதியது.
பணிமனையில் இருந்து ரயில் வந்ததால் அதில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். விபத்து காரணமாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் 1ஆவது நடைமேடையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நடைமேடைகளில் ரயில் சேவை சீராக உள்ளது.
தடம்புரண்டு உள்ள ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது' என்றார்.
இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகப் பணப்பரிவர்த்தனை - குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை