திருவள்ளூர்: மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜா என்கின்ற கஜேந்திரன்(63). இவர் 2007-ஆம் ஆண்டில் சென்னை மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் காவல் துறையின் விசாரணையின் போது, குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கஜேந்திரன், 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி முதல் புழல் மத்தியச் சிறையில் தண்டனை பிரிவில் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், கழிவறைக்குச் செல்வதாகச் சென்ற கஜேந்திரன், நீண்ட நேரமாகத் திரும்பி வராததால், சந்தேகமடைந்த மற்ற கைதிகள் கழிவறை சென்று பார்த்துள்ளனர். அப்போது கஜேந்திரன் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கைதிகள் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற சிறை அதிகாரிகள், இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற புழல் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 20 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் கஜேந்திரன் திடீரென தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஜேந்திரன் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மற்ற கைதிகளுடன் ஏதேனும் தகராறு ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் புழல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சிறையில் உள்ள சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் என பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் கைதி ஒருவர் தற்கொலை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நஷ்டத்தை ஏற்படுத்தும் விவசாயக் கருவிகள் ஒப்படைப்பு..! தென்காசியில் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்..!