சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், உத்தண்டி நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த சியாமளா தேவி தனது தாயாருடன் வந்து புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப்புகாரில், “தனது கணவர் இறப்பை கணவரின் குடும்பத்தினர் மறைத்துவிட்டதாகவும்; கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சியாமளா தேவியின் தாயார் கூறுகையில், “எனது மகள் சியாமளா தேவிக்கும், கும்பகோணத்தை சேர்ந்த சரவணனுக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சரவணன் பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரிந்தார்.
இந்நிலையில் சியாமளாதேவி பிரசவத்துக்காக சென்னை வந்தார். இதற்கிடையில் சியாமளாதேவியின் கணவர் சரவணன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரின் இறப்பு குறித்து சியாமளாதேவிக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.
இது தொடர்பாக கும்பகோணத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். இந்தப் புகார் காவல் துறை தலைவர் (DGP) அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் நண்பரைக் கொலை செய்து புதைத்த இருவர் கைது