சென்னை: தாம்பரம் சானிடோரியம் துர்க்கை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு வடிவேல் என்ற வடிவழகன் (27). இவர்மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று (ஜூன் 15) இரவு செனாய் நகர் முத்தையப்பன் தெருவில் சென்று கொண்டிருந்த கருப்பு வடிவேலை, அடையாளம் தெரியாத 5 பேர், வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முன்னதாக கருப்பு வடிவேல் உடல் குருதி வெள்ளத்தில் சாலையிலேயே நீண்ட நேரமாக கிடந்துள்ளது. உடலை எடுத்துச் செல்ல மருத்துவனை அமரர் ஊர்தி நீண்ட நேரமாக வராத நிலையில், காவல் துறையினர் ஆட்டோ மூலமாக உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கொலை நடந்ததற்கான காரணம் குறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையாளிகளை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதில் கொலையில் ஈடுபட்டவர்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன், சுரேஷ், காரமணி வினோத் உள்பட 5 பேர் கொண்ட குழு எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருப்பு வடிவேலுவை "திருடன் திருடன்" எனக் கூச்சலிட்டவாறே துரத்தி கழுத்து மற்றும் தலை பகுதியில் கொடூரமாகத் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கறுப்புப் பேட்ஜ் அணிந்து போராட்டம்!