சென்னை: தி.நகரில் இயங்கிவரும் பிரபல தனியார் துணிக்கடையான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான துணி குடோன் சிவஞானம் தெருவில் உள்ளது. அந்த குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி பண்டல்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் துணிகள் வைக்கப்பட்டுள்ள அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர், குடோனில் இருந்த ஊழியர்கள் சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் தியாகராய நகர், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி துணி குடோனில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக துணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பிரபல தனியார் துணிக்கடையில் உயர்மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி சேதமாகின. மேலும், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக சில நாள்களாக சென்னையில் அந்த பகுதியில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சென்னையில் நடந்த மிகப்பெரிய தீ விபத்தில் இந்த தீ விபத்தும் ஒன்றாகும்.
இதையும் படிங்க:"தலைமை ஆசிரியரே பள்ளிக்கு லேட்டா வரலாமா"- தாமதமாக வந்த தலைமை ஆசிரியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய மேயர்!