சென்னை: அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பிரபல ரவுடி ஓட்டேரி கார்த்தி என்பவருடன் விஜயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கத்தின் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு விஜயகுமாரை சந்திப்பதற்காகவும், நாய் வாங்குவதற்காகவும் அம்பத்தூர் ஒரகடம் பகுதிக்கு வந்த ஓட்டேரி கார்த்தி வந்துள்ளார். அதேநேரம் தன் வீட்டு மாடியில் விஜயகுமார் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இதில் ஓட்டேரி கார்த்தியின் இரு கைகள் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கையில் இருந்த எலும்புகள் நொறுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சை மூலம் கார்த்தியின் இரு கைகளும் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் இரண்டு தினங்கள் கழித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல குற்ற சம்பவங்களில் ரவுடி ஓட்டேரி கார்த்திக்கு தொடர்பு உள்ள நிலையில், யாரையாவது கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவணமில்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா?