தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு சேலத்தில் பஞ்சலோக அம்மன் சிலையை 5 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சிகள் நடப்பதாகத் தகவல் கிடைத்தது. காவல் துறை கூடுதல் ஏடிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் காவல் துறை கூடுதல் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படையினர் சேலம் ஆத்தூர் கங்கவல்லியைச் சேர்ந்த ராஜசேகர்(36) என்ற ரியல் எஸ்டேட் தரகரிடம் சிலையை வாங்குவது போல் பேசினார்கள். அப்போது பழமையான பஞ்சலோக அம்மன் சிலை 5 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதாகவும் தற்போது 10 லட்சம் ரூபாய் முன் பணம் தந்தால் சிலையின் படத்தை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனிப்படையினர் சேலம் ஆத்தூர் கங்கவல்லிக்குச் சென்றனர். அங்கு ராஜசேகரிடம் இருந்த ஒரு அடி உயரமும் ஆறரை கிலோ எடையும் கொண்ட பஞ்சலோக அம்மன் சிலையைப் போராடி மீட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாமக வேட்பாளர் ஏமாற்றி வெற்றிபெற்றதாகக் கூறி 5 பேர் மனு
இத பற்றி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் ஏடிஜிபி அபய்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சேலம் ஆத்தூர் கங்கவல்லி பகுதியில் விற்க வைத்திருந்த பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டுள்ளோம். இந்தச் சிலை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரியவில்லை. இந்தச் சிலை குறித்து தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு தகவல் தரலாம்.
சிலை பற்றி அறிந்தவர்கள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு 9498154500 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம். சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்ய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.