சென்னை: சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் பொறியல் பட்டதாரி வெங்கடேஷ். இவர், கடந்த டிசம்பர் மாதம் சென்னை விருகாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "வெளிநாட்டில் எம்.எஸ். படிப்பு படிக்க முயற்சி செய்தபோது, சாலிகிராம் பகுதியில், ரித்விக் அண்ட் வ்ருக்ஷா கன்சல்டண்ட் நிறுவனத்தை நடத்திரும் கார்த்திக், சவ்கார்த்திகா தம்பதியை அணுகினோம்.
போலி ஆவணம்
இங்கிலாந்தில், சவுத் வேல் பல்கலைக்கழகத்தில், எம்எஸ் ஏரோநாட்டிக்கல் சீட் வாங்கித்தருவதாக கூறினார். தங்களுடைய நிறுவனத்தின் மூலம் பலரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்துள்ளதாக கூறி என்னை நம்ப வைத்தனர். சீட் வாங்குவதற்கு 39 லட்சம் செலவாகும் என அவர்கள் கூறியதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணைகளில் 38 லட்சத்து 89ஆயிரத்து 550 ரூபாயை அவர்களிடம் செலுத்தினேன்.
நீண்ட நாள்களாக அட்மிஷன் தொடர்பாக எவ்வித தகவலும இல்லாத சூழ்நிலையில், அந்த தம்பதியிடம் கேட்டேன். அப்போது, சவுத் வேல் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துவிட்டதாக கூறி அட்மிஷன் கடிதம் ஒன்றை தந்தனர். அதை எடுத்துக்கொண்டு இங்கிலாந்து கிளம்ப ஆயத்தமான போதுதான் அந்த ஆவணம் போலியானது என தெரியவந்தது.
மோசடிப்புகார்
பலமுறை அவர்களை தொடர்பு கொண்டபோதும், அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. அதன்பின்னர் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்" என குறிப்பிட்டிருந்தார்.
அந்தப்புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை வெங்கடேஷ் அணுகினார். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் சவ்கார்த்திகா, கார்த்திக் தம்பதியினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தேடிவந்த நிலையில், கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கில் மோசடி
தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கார்த்திக்கிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வெளிநாட்டில் படிக்க சீட் வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட தம்பதி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதோடு, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் - பட்டதாரி இளைஞர் கைது!