சென்னை: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எஸ்எப்ஐ மற்றும் ஏ.பி.வி.பி அமைப்பினர் இடையே நடந்த மோதலில் தமிழ்நாடு மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஐஐடி வளாகம் முன் இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இன்று (பிப்.21) தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் பகுதியில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் துறை தலைவர் நவீன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் உட்பட பல்வேறு காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக கோஷமிட்டு கொண்டு இருந்தவர்கள் திடீரென ஆர்எஸ்எஸ் அணியும் சீருடையை கொளுத்த முயன்றனர். அப்போது அதை கண்டு போலீசார் அனுமதியின்றி இவ்வாறு செய்ய கூடாது, என்று கூறி அந்த துணியையும் அவர்கள் வைத்திருந்த பெட்ரோலையும் இருந்து வாங்க முயற்சி செய்தனர்
அப்போது ஆர்ப்பாட்டகாரர்களில் சிலர் போலீசாரை தாண்டியும், அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்ட தடுப்பு வேலிகளை தாண்டி ஓட முயன்றனர். போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன் பிறகு போலீசார் கைது நடவடிக்கையாக காவல் பேருந்தில் ஏற்ற முயன்ற போதும் அவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியாக போலீசார் அவர்களை பேருந்தில் ஏற்றி சென்று நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு.. தனித்தேர்வர்களும் பங்கேற்க அறிவுறுத்தல்..