சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சாய்நாத் (55). தொழிலதிபரான இவர் மீது மோசடி சதி செய்தல் உட்பட 4 பிரிவுகளில், மத்தியப்பிரதேச மாநிலம் போபால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து போபால் மாநகர போலீசார் சாய்நாத்தை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் சாய்நாத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்லத் திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.
இதனை அடுத்து போபால் மாநகர காவல்துறை ஆணையர், குற்றவாளி சாய்நாத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தது.
அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களைச் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் சென்னையிலிருந்து கோலாலம்பூர் வழியாக இந்தோனேசியா நாட்டிற்குத் தப்பிச்செல்லத் தலை மறைவு குற்றவாளியான சாய்நாத் வந்துள்ளார்.
அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள் இவர் போபால் மாநகர போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் சாய்நாத்தின் விமான பயணத்தை ரத்து செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, சாய்நாத்தை குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு இது குறித்த தகவலைக் குடியுரிமை அதிகாரிகள் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாநகர போலீஸ்க்கு தெரியப்படுத்தினர். மேலும், சாய்நாத்தை அடைத்து வைத்துள்ள அறைக்கு, சென்னை விமான நிலைய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கு இடையே மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலிருந்து தனிப்படை போலீசார் தலைமறைவு குற்றவாளியான தெலங்கானா மாநில தொழில் அதிபர் சாய்நாத்தை கைது செய்து அழைத்துச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் நிற்கும் நெட்டி கலைப்பொருட்கள்.. புவிசார் குறியீடு கிடைத்தும் புலம்பலில் கலைஞர்கள்.. அரசு செய்ய வேண்டியது என்ன?