சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கக்கூடிய சித்தார்த் என்ற 13 வயது சிறுவனும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுவன் பயிற்சியில் இருக்கும்போது, திடீரென ஏர் கன் வெடித்து அலுமினிய குண்டு தோள்பட்டையில் பாய்ந்துள்ளது. இவ்வாறு குண்டு உடலில் பட்டதும் சிறுவன் சித்தார்த் கதறி துடித்துள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட தந்தை சதீஷ்பாபு, உடனடியாக சிறுவனை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். சிறுவனின் தோள்பட்டையில் ஏர் கன் குண்டு வெடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனுக்கு ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் உரிய ஆவணங்களை வைத்து பயிற்சி மையம் நடைபெறுகிறதா என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'விஜயகாந்தை பார்க்க வராமல் போனது வாழ்நாள் துயரமாக இருக்கும்' - நடிகர் கார்த்தி கண்ணீர்..!