சென்னை: அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று இரவு 134 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது விமானத்தில் பயணித்த கவுகாத்தியை சேர்ந்த சஜீத் அலி (46) என்ற பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு விமானத்திற்குள் அவதிப்பட்டார். அவருடன் பயணித்துக் கொண்டிருந்த அவருடைய சகோதரர் ராஜேஷ் அலி விமான பணிப்பெண்களுக்கு தெரிவித்தார்.
உடனடியாக விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்து விமானத்தில் பயணிக்கும் ஒரு பயணிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே இந்த விமானத்தை தர இயங்குவதில் முன்னுரிமை அளித்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால் பயணி சஜித் அலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சஜீத் அலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சஜித் அலி ஏற்கனவே கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறுவதற்காக பெறுவதற்காக, விமானத்தில் தனது சகோதரர் ராஜேஷ் அலியுடன் வந்தபோதுதான் திடீரென உடல்நிலை மேலும் மோசமாகி உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஓர் 'கூகுள் குட்டப்பா'; பள்ளி மாணவன் கண்டுபிடித்த சூப்பர் ரோபோ!