சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தத்திற்கான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், “அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தால் ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரிசெய்து, பே - மேட்ரிக்ஸ் முறையில் 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராடியதால் சர்வீஸ் குறைக்கப்பட்டு, பல தண்டனைகள் தரப்பட்டு, பல்வேறு இழப்புகளை சந்தித்தனர். இதனை சரி செய்து சீனியாரிட்டி வழங்க அரசு ஒப்புக்கொண்டது. பல்வேறு படிகளை உயர்த்தவும், மகளிர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பேட்டா பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், ஃபிக்ஸட் பேட்டாவாக தினசரி வழங்கவும் ஒப்புக்கொண்டனர்.
போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகள் வழங்குவதை தவிர்க்க பொதுவான நிலையான வழிகாட்டுதலை கோரினோம். அதற்காக ஒரு குழு அமைத்து ஆணையிட்டுள்ளனர். அந்தக்குழு அனைத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.
தொழிலாளர் எண்ணிக்கையை ஒரு பேருந்துக்கு 7.5 விழுக்காடு என்றிருந்ததை, அதிமுக ஆட்சியில் 6.5 விழுக்காடாக குறைத்து விட்டது. அதை மீண்டும் 7.5 விழுக்காடாக மாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 3 லிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்த மறுப்பு தெரிவித்தோம். எனவே இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 81 மாத அகவிலைப்படி வழங்காமல் இருப்பது குறித்து பேசியுள்ளோம்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த 99 விழுக்காடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒப்பந்த காலத்தை நான்கு ஆண்டுகளாக மாற்றுவது மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும் ஆகிய இரு விவகாரத்தால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை” என கூறினார்.
இதையும் படிங்க: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு