சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது. அதன்படி, கடந்த 31ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. விரைவில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று காலையில் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பூம்புகார் முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு...