தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்து, வேதாந்தா நிறுவனத்தின் வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு வழங்கிய 815 பக்க தீர்ப்பை வழங்கினர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை பார்க்கும்போது வேதாந்தாவின் வாதங்களை நிராகரிக்கவே வேண்டியுள்ளது. 1998ஆம் ஆண்டு நீரி அறிக்கையில், தற்போதைய இடத்தில் இந்த தொழிற்சாலை அமைந்திருக்கக் கூடாது, பசுமை போர்வை அமைக்கப்படவில்லை, ஆலையை சுற்றி காற்று மாசு ஏற்பட்டுள்ளது. எனவே ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து ஆலையை மூட அறிக்கை அளித்திருந்தது.
அதனடிப்படையிலேயே உயர் நீதிமன்றமும் மூட உத்தரவிட்டது. 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பல்வேறு குழுக்களின் எந்தவொரு பரிந்துறை அறிக்கையையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டு 92 நாள்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியில்லாமல் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது அதிர்ச்சிகரமான உண்மையாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆலை இயங்கினாலும் கூட, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய தவறி விட்டது. ஆலையின் முந்தைய நடவடிக்கைகளின் அடிப்படையில், ஆலையை நிரந்தரமாக மூட அரசு முடிவு எடுத்தது நியாயமானது, இந்த முடியில் எந்த தவறும் இல்லை. 2016 - 2017ஆம் ஆண்டு வரை ஆலை விரிவாக்கத்திற்கு வேதாந்தா நிறுவனம் 600 கோடி வரை முதலீடு செய்துள்ளது.
ஆலை விரிவாக்கத்திற்காக கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் சட்டத்தின் 11 விதிகளையும், காற்று சட்டத்தின் 6 விதிகளும் மீறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆலையை மூட 2018ல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு டிஜிபி, கொதிகலன்கள் இயக்குநர், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குநர், ஆலையை மூட தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை ஆகிய அனைத்தும் செல்லும்.
இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கவும், நிர்வாக பணிகளை மேற்கொள்ள இடைக்கால உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!