செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, 10 ரூபாய் நோட்டுகளை அவர் அருகில் வீசி கவனத்தை திசை திருப்பி, அவரிடம் இருந்த 80 ஆயிரத்தை லாவகமாக கொள்ளையர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் வசித்து வருபவர், திருமலைநாதன்(60). ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர், வேளச்சேரி பிரதான சாலை ராஜகீழ்பாக்கம் சிக்னல் அருகே உள்ள இந்தியன் வங்கியில் அவரது கணக்கில் இருந்து 80,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சிறிய பையில் வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு அவரது இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் பணம் வைத்த பையை மாட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டின் அருகே உள்ள துணி செய்யும் கடைக்குச் சென்று துணியை வாங்குவதற்காக நின்று பேசிக் கொண்டிருந்து உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருமலைநாதனிடம் சென்று, '10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன..உங்கள் பணமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அப்போது அவர், 'அவை என்னுடைய பணம் இல்லை' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மருமகனை சுடுதண்ணீர் ஊற்றி கொன்ற மாமியார்.. திருச்சியில் நடந்தது என்ன?
இதனிடையே, அங்கு துணி தேய்க்கும் கடையில் துணிகளை தேய்த்துக் கொண்டு இருந்த பெண்மணி ஒருவர், 'அவை என்னுடைய பணம்' என்று கூறி அந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு திரும்பிப் பார்த்த திருமலைநாதன் தனது வாகனத்தில் வைத்திருந்த பையை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும், அங்கிருந்து இரண்டு நபர்களும் தன் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த திருமலைநாதன் உடனே இந்த சம்பவம் குறித்து சேலையூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது மர்மநபர்கள் திருமலைநாதன் கவனத்தை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தாம்பரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி அடித்துக்கொலை!