சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த ஆலோசனை கூட்டம்.. அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குவது யார்.. மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 157 வது படம் என்ன, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்கை கதையான '800' படத்தின் அப்டேட் ஆகிய சினிமா செய்திகளை சினிமா சிதறல்கள் தொகுப்பின் மூலம் காணலாம்.

விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது: விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் உத்தரவுப்படி நடைபெறும் உள்ள இந்த கூட்டத்தில் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என நடிகர் விஜய், இயக்கத்தின் பொது செயலாளரான புஸ்ஸி ஆனந்திற்கு உத்தரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்டத் தலைவரும் அவர்களின் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தலா மூன்று பேரை அழைத்து வர உத்தரவிடப்பட்டு உள்ளது. சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

'800' படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்: இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது.
மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கி உள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீதேவி மூவீஸின் தயாரிப்பாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் '800' படத்தின் இந்திய திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார். '800' படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் தமிழில் படமாக்கப்பட்டது. இப்போது அது தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிலும் வெளியிடப்படுகிறது.
இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொச்சின், சண்டிகர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படமாக்கப்பட்டது. இதுகுறித்து சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பேசுகையில், "முரளிதரனின் வாழ்க்கையை பெரிய திரையில் கொண்டு வருவது சவாலான பணி. அவர் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்து இருந்தாலும் வலிமையாக இருந்தார்.
800 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அவர் படைத்துள்ளார். எனவே, படத்திற்கு அதையே தலைப்பாக வைப்பதே சிறந்ததாக இருக்கும் என முடிவு செய்தோம். சிறுவயதில் இருந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஆன வரையிலான அவரது பயணத்தை இப்படம் உள்ளடக்கியது.
கடந்த ஆண்டு தயாரிப்பாளராக 'யசோதா' படத்தை பான் இந்தியா அளவில் வெளியிட்டு வெற்றி கண்டேன். இப்போது '800' திரைப்படத்தை இந்தியா தாண்டியும் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அக்டோபரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். செப்டம்பரில் டிரைலர் வெளியாகும்" எனக் கூறினார்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 157 வது படம் அறிவிப்பு: தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் அதே போல் மற்றொரு படத்தை அவரிடம் இருந்து எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘Mega157 ’ திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்: கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ், நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. இப்படம் அந்நிறுவனத்தின் முதல் படமாகும். இதனை 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தின் இயக்குநறான விஷால் வெங்கட் இயக்கிவருகிரார்.
இப்படத்தில் அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக இந்த புதிய திரைப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தின் பூஜை எல்வி பிரசாத் லேப்-ல் (LV Prasad Lab) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்படம் குறித்து இயக்குனர் விஷால் வெங்கட் கூறும்போது, ''என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி. எனக்கு இந்த இடம் கிடைக்க நீங்கள்தான் காரணம். இந்தப் படத்திற்கும் அதே போல உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி.
இந்தப் படத்தில் நான் தேர்வு செய்துள்ள நடிகர்களுக்கு நல்ல கதாபாத்திரமாக இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார். அவருடன் பல விஷயங்கள் பேசியுள்ளேன். அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கும் நன்றி.
அவர்களுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களை பற்றியதாகத் தான் இருக்கும். கூடுதலாக ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும். எங்கள் இளம் குழுவிற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள்: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் அரங்கத்திற்குள் அடைபட்டு கிடந்த சினிமாவை கிராமங்களுக்குள் உலவ விட்டவர். வெள்ளந்தி மனிதர்களை வெள்ளித்திரையில் நடமாட விட்ட உன்னத படைப்பாளி பாரதிராஜா.
இன்று அவருக்கு பிறந்த நாள். ஆனால் சான்றிதழ் படி இவரது பிறந்தநாள் ஜூலை 17. இரண்டு பிறந்தநாளையும் கொண்டாடுவது இவரது வழக்கம். இவரது நடிப்பில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க : சென்னை உலக சினிமா விழா.. மூன்று நாள் விழாவில் 15 படங்கள் திரையிடத் திட்டம்!