சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை ஆணையர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளைக் கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் சாதிக் (30), முகமது அப்பாஸ் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் உடமைகளைச் சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் இரண்டு பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.
அப்போது இரண்டு பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து 33 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரிடமும் சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனா்.
இதையும் படிங்க: தண்டாவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் - ட்ரெண்ட் ஆகும் காணொலி!