சென்னை: சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவரும், நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச்சுவரும் ரூ.7.99 கோடி நிதி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்தது.
இச்சுற்றுச்சுவரினை சீரமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் விடுத்தனர். அதன்பேரில், இந்தக் குளத்தின் சுற்றுச்சுவர், ரூபாய் 2.62 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்துத் தரப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆய்வுசெய்ய சென்றபோது இத்தடுப்புச் சுவரினைச் சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அக்கோரிக்கையினை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் நான்கு புறத்தடுப்புச் சுவர், ரூபாய் 5.37 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்துத் தரப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய வகை கரோனா: மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை