சென்னை: இன்று (அக்.5) நடைபெற்ற கலந்தாய்வில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் 223 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒரு கல்லூரி கூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உள்ளது.
அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. இந்த இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
82% மாணவர்கள் தனியார் கல்லூரிகளை தேர்வு
இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 5 ஆயிரத்து 920 மாணவர்களில், 82 விழுக்காடு அதாவது 4 ஆயிரத்து 920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 ஆயிரத்து 920 மாணவர்கள் தற்போது வரை கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.
இவர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 161 மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 391 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 1017 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 82 விழுக்காடு மாணவர்கள், அதாவது 4920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
அரசுக்கு கூடுதல் செலவு
அரசு கல்லூரிகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிகம் தேர்வு செய்துள்ளனர்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் ஏறதாழ 5 ஆயிரம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து இருப்பதால், அவர்களுக்கான நான்கு ஆண்டுகள் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வங்கிகளுக்கு விடுமுறை