அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு மருத்துவ உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்பட நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரை இன்று (அக்.20) அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கிண்டி ராஜ்பவனில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் தீரஜ் குமார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அதற்கான ஒப்புதல் கோரி முதலமைச்சர் உத்தரவிட்டதன் காரணமாக, இன்று ஆளுநரை சந்தித்துப் பேசினோம். அவர் முடிவெடுக்கும் வரை மருத்துவக் கலந்தாய்வு நடத்த முடியாத சூழல் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி வலியுறுத்திள்ளோம். விரைந்து அவர் ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ஆளுநரிடம் தெரிவித்தோம். தொடர்ந்து, விரைவாக ஒப்புதல் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்” என்றார்.