சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்துடன், 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது பேசிய அவர், " நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கான 13 வாக்குச்சாவடிகளில் நடக்கும் மறுவாக்குப்பதிவு ஆகியவற்றுக்கு மொத்தம் 15,939 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவுபெறவுள்ளது.
சூலூர் தொகுதியில் மொத்தம் 324 வாக்குச்சாவடிகள் உள்ளன, அதில் 778 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 389 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 442 விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 250 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 1,199 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 295 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 313 விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
297 வாக்குச்சாவடிகளை கொண்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் 1068 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 357 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 387 விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
அதேபோல், 257 வாக்குச்சாவடிகள் கொண்ட ஓட்டப்பிடாரம் தொகுதியில் 335 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 335 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 360 விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட உள்ளன " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " கட்டுப்பாட்டு இயந்திரங்களும், விவிபேட் கருவிகள் மட்டுமே திருவள்ளூர் சேமிப்பு கிடங்கிலிருந்து தேனிக்கு கொண்டு செல்லப்பட்டன. அனைத்து இயந்திரங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் நடக்கும் நான்கு சட்டப்பேரவை மற்றும் 13 மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகள் 656 கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படும் " என கூறினார்.
மேலும், கமல் மீதான புகார்களை விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்த பின்னர் தேர்தல் ஆணையத்தில் அது பற்றிய தகவல்கள் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.