சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27ஆம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது. கடந்த 27ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வும், 28ஆம் தேதி 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றன.
பொதுப்பிரிவினருக்குக் கலந்தாய்வு
அதனைத் தொடர்ந்து, 30ஆம் தேதிமுதல் பொதுப்பிரிவினருக்குக் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 11.59 மணி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்விற்கு பிப்ரவரி 2ஆம் தேதிமுதல் 5ஆம் தேதிவரை பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் உள்ள இடங்களைத் தேர்வுசெய்வதற்கு வரிசைப்படி பதிவுசெய்தனர்.
மேலும், பொதுப்பிரிவில் கலந்துகொள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவுசெய்ததில் தரவரிசை ஒன்று முதல் 10 ஆயிரத்து 462 வரை இடம்பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள், அதாவது நீட் மதிப்பெண் 710 முதல் 410 வரை பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 9951 பேர் கலந்தாய்வில் பங்கேற்கப் பதிவுசெய்தனர். அவர்களில் விரும்பும் கல்லூரிகளை 9859 பேர் பதிவுசெய்திருந்தனர். மேலும், விரும்பிய கல்லூரி மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பினைத் தேர்வுசெய்து 9723 பேர் தங்களின் விருப்பத்தை இறுதிசெய்து உறுதிசெய்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணி
இதைத் தொடர்ந்து நேற்று (பிப்ரவரி 7) சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களையும், அவர்களுக்கான அழைப்பு கடிதத்தையும் மருத்துவக்கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்க்க 6082 பேருக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
மேலும், மாணவர்களுக்கு மையங்களும் ஒதுக்கீடுசெய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரில் சென்று உரிய சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதிமுதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளைத் தேர்வுசெய்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் வெளியிடப்படுகின்றன.
ஒதுக்கீடு ஆணை பெறக்கூடிய மாணவர்கள் தங்களது ஆணையை பிப்ரவரி 16ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிப்ரவரி 17ஆம் தேதிமுதல் 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குச் சென்று சேர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரி வாரியாகக் காலியிடங்கள் விவரம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மூன்றாயிரத்து 848 இடங்களும், கே.கே. நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரியில் 75 இடங்களும் என மூன்றாயிரத்து 923 இடங்களிலும், 17 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 368 இடங்களும் என மாெத்தம் 5,291 இடங்கள் காலியாக உள்ளன.
பிடிஎஸ் படிப்பில் இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 155 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1193 இடங்களும் என மொத்தம் ஆயிரத்து 1248 இடங்கள் காலியாக உள்ளன.
மேலும், https://tnmedicalselection.net/news/01022022050416.pdf என்ற இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல் மருத்துவப் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கு அதிகளவில் மாணவர்கள் விரும்பும் இடங்களைப் பதிவுசெய்யாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.