தமிழ்நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆறு பேர் நுழைந்திருப்பதாக உளவுத் துறை காவல் துறையினருக்கு அளித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆறு பயங்கரவாதிகளும் இலங்கை வழியாக தமிழ்நாட்டில் நுழைந்திருப்பதாகவும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் ஊடுருவியுள்ளதாக காவல் துறையினருக்கு உளவுத் துறையினர் அளித்த ரகசிய தகவலையடுத்து கோவையில் நேற்றிரவு முதல் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு திடீரென மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வாகன சோதனை, சுங்கச்சாவடி சோதனையில் ஈடுபடுமாறு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை போன்று விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் இதற்காக இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு, காவல் துறையினரை உஷார்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக கோவை நகரில் முக்கிய இலக்காக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவையில் நேற்றிரவு முதல் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் எனவும் இதில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ரகீம் பற்றிய சில தகவல் கிடைத்துள்ளதாகவும் வாகன சோதனையில் அவரையும் தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.