சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று மாநிலம் முழுவதும் சில அரசுப்பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வினை நடத்தியது.
இந்த குரூப் 1 தேர்வு, துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 4 பணியிடங்கள், தீயணைப்பு, மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என 66 பணியிடங்களுக்காக நடைபெற்றது.
இந்தத் தேர்வினை ஒரு லட்சத்து 30 ஆயிரம் தேர்வர்கள் 32 மாவட்ட தலைநகரங்களில் 856 தேர்வு மையங்களில் எழுதினர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் ஆறு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன. தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் வழங்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மொத்தமுள்ள 200 கேள்விகளில் குறிப்பிட்ட ஆறு கேள்விகளில் சில கேள்விகளுக்கான விடை தவறாகவும், கேட்கப்பட்ட கேள்வி தவறாகவும், குறிப்பிட்ட கேள்வி ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பிலும் தவறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கேள்வி எண்கள் 32, 33, 59, 64, 90, 163 ஆகியவற்றில் பிழைகள் உள்ளதாக தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கவேண்டும் என்றும், இல்லையெனில் இவை தேர்வர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 51% பேர் மட்டுமே பங்கேற்ற குரூப்-1 தேர்வு