சென்னையில் இரவு நேரங்களில் வீடு புகுந்து செல்போன் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், அவற்றை கண்காணிக்க சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் தலைமையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, குற்றாவளிகளிடம் இருந்து 1000, 2000 ரூபாய்க்கு செல்போன்களை வாங்கும் இடைத்தரகர் பாலமுருகன், சதீஷ் ஆகிய இருவரை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறி செய்த செல்போனை பர்மா பஜாரில் விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் பர்மா பஜார் கடைக்கு சென்ற காவல்துறையினர், அங்கு விசாரணை நடத்தினர்.
அப்போது வடசென்னை பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடும் திருட்டு செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பாலிஷ் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பர்மா பஜார் வியாபாரிகள் குலாம் அலி, கமுருதீன், மருது, அந்தோணிசாமி ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 51 செல்போன்கள், 59 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.