சென்னை: உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 48 விசாரணை அறைகள் உள்ள நிலையில், அதன் எண்ணிக்கையினை 57ஆக உயர்த்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக உயர் நீதிமன்ற பிரதான கட்டடத்தில் இருந்த நீதிபதிகளின் அறைகளில் மாற்றங்கள் செய்து, 6 புதிய விசாரணை அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய விசாரணை அறைகளை இன்று (மே 15) பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். பின்னர் நீதிபதி இருக்கையில் அமர்ந்து, விசாரணை அறையை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன், ஜி.சந்திரசேகரன், முகமது சபீக், சுந்தர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், உறுப்பினர் வேல்முருகன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தரப்பில் அதன் தலைவர் சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் முன்னாள் தலைவர் மோகன்கிருஷ்ணன், முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.