சென்னை: சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தகுமார் ஜக்தாப் (43). இரண்டு அடுக்கு கொண்ட வீட்டில் நந்தகுமார் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் தரைதளத்தில் சொந்தமாக நகைப் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும், இவர் தினமும் பிரபல நகைக் கடைகளில் இருந்து பழைய நகைகளை வாங்கி வந்து உருக்கி 24 கேரட் புதிய நகைகளாக மாற்றிக் கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது நகைப்பட்டறையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஸ்வின் உத்தம் (22), மாதேவ் (32), ரோகித் (22), அனில் (30), விநாயக் (22) மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல் (18) உள்ளிட்ட சிலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் (நவ 27) இரவு ஊழியர்கள் வேலை முடிந்து பட்டறையைப் பூட்டி விட்டுத் தூங்கச் சென்றுள்ளனர். நேற்று (நவ.28) காலை நந்தகுமார் வழக்கம் போல் பட்டறைக்கு வந்து பார்த்த போது பட்டறையில் இருந்த 6.400 கிலோ எடையுள்ள உருக்கிய தங்கம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பட்டறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டறை பூட்டை திறந்து உள்ளே வந்து உருக்கிய தங்கத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட நந்தகுமார் இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகை பட்டறை ஊழியர்களான மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஸ்வின் உத்தம் (22), மாதேவ் (32), ரோகித் (22), அனில் (30), விநாயக் (22) மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல் (18) ஆகிய 6 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்கள்: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை.. வெளியான முழு பட்டியல் - 5 தனிப்படை அமைத்து விசாரணை தீவிரம்!