சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், தீவிர தூய்மைப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று(மே.29) நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சியில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கட்டிட கழிவுகள் உள்ள பகுதிகளை மண்டல வாரியாகக் கண்டறியப்பட்டு, "தீவிர தூய்மைப் பணி" திட்டத்தின் கீழ் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மே 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் சென்னையின் 15 மண்டலங்களில் 590 மெட்ரிக் டன் குப்பை, 1,605 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் என மொத்தம் 2,195 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை தினமும் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 10 நாட்களில் சுமார் 1,500 மெட்ரிக் டன் குப்பைகளும், 5,000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகளும் அகற்றப்படவுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சேகர் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு: புதிதாக 30,016 பேருக்கு தொற்று உறுதி!